tamilnadu

img

மூன்றாம் கட்ட தேர்தலில் வன்முறை அதிகரிப்பு மேற்குவங்கத்தில் காங்-திரிணாமுல் மோதல்

புதுதில்லி: மூன்றாம் கட்டமாக செவ்வாயன்று (ஏப்.23) பல்வேறு மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் முந்தைய தேர்தல்களைவிட வட இந்தியாவில் வன்முறைகள் அதிகரித்தன. மேற்குவங்கத்தில் மேற்கு வங்கத்தில் வாக்களிக்க வந்த ஒருவர் காங்கிரஸ் - திரிணாமுல் கட்சியினருக்கு இடையேநடந்த மோதலில் பலியானார். அங்கு நடந்தவெடிகுண்டு வீச்சில் 3 திரிணாமுல் கட்சியினர் படுகாயம் அடைந்தனர். இந்தியாவில் 17ஆவது நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. செவ்வாயன்று மூன்றாம் கட்டமாக கேரளா, கர்நாடகா,குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 116 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. உத்தரபிரதேசம், மத்தியப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் தேர்தலையொட்டி வன்முறைகள் நடந்துள்ளன.  மூன்றாம் கட்ட தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர்கள் அமித்ஷா,அத்வானி உள்ளிட்டோர் குஜராத்தில் வாக்களித்தனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அஸ்ஸாமில் உள்ள திஸ்பூரில் மனைவியுடன் வந்து வாக்களித்தார். ஜம்மு அனந்த்நாக் தொகுதி வேட்பாளரும் பிடிபி தலைவருமான மகபூபா முப்தி, உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவரும் மெயில்பூரி தொகுதி வேட்பாளருமான முலாயம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், கர்நாடக மாநிலத்தில் முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா உள்ளிட்டோர் செவ்வாயன்று நடந்த மூன்றாம் கட்ட தேர்தலில் வாக்களித்தனர். காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவரது மனைவியுடன் பூத்துக்குள் நுழைந்து வாக்களித்தது விவாதத்தை ஏற்படுத்தியது. அசாமில் பின மந்திர் வாக்குப்பதிவு மையத்தில் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க அனுமதித்த வாக்குப்பதிவு அதிகாரி கவுர்பிரசாத் பர்மனை காவல்துறையினர் கைது செய்தனர்.

;